Tuesday, September 16, 2008

திருப்தி- சிறுகதை

காவிரி தாயின் பாசத்தில் செழுமையுடன் விளங்கும் தஞ்சை மாவட்டத்திற்குட்பட்ட ஒரு சிறிய கிராமத்தின் மையத்தில், அந்த பள்ளிக்கூடம் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது.


"எனக்கு உடம்பு சரியில்லை அதனால் வீட்டுப்பாடம் செய்யவில்லை" என்று மிக வருத்தத்துடன் ஒரு மிளகு (கிராம பகுதியில் சிறு குழந்தையை இப்படி அன்பாக அழைக்கும் வழக்கம் இருக்கிறது) இன்னொரு மிளகிடம் சொல்ல "நான் பண்ணிட்டேன்னே !!!" என்று ஒரு சாம்ரஜியமே தன் வசமான சந்தோஷத்தில் சொல்லியது. திடீரென்று "டீச்சர் வந்துட்டாங்க .. டீச்சர் வந்துட்டாங்க" என்று சலசலப்புடன் ஒரு அமைதி நிலவ தொடங்கிய நேரத்தில் மதுரம் உள்ளே நுழைந்தாள். இளங்கலை பட்டதாரியான மது பார்ப்பதற்கு சிமிழ் போன்று இருப்பாள். அவள் கிராமத்தின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிக ஆசிரிய பணி கிடைக்க, அதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தொடர்ந்தாள்.



மது தன் இருக்கையை நெருங்கி, பாடப்புத்தகத்தை பிரித்துகொண்டே எல்லோரையும் பார்த்து, நேற்று எந்த பக்கத்தில் நிறுத்தினேன் என்று பொதுவாக ஒரு கேள்வி கேட்க "72 ஆம் பக்கத்தில் கடைசி பத்தி என்று சில குரல், இல்ல டீச்சர் 73 ஆம் பக்கத்தில் முதல் பத்தி என்று சில குரல், இதற்கிடையில் "பாத்தியா டீச்சர் வீட்டுப்பாடத்தை மறந்துட்டாங்க", என்று பக்கத்தில் உள்ள மிளகை பாக்க அதுவோ பிடித்த சாம்ராஜ்யமே திடீரென்று அழிந்தார்போல் முகத்தை தொங்க போட்டுக்கொண்டது.

மது "ஹ்ம்ம் ஹ்ம்ம் சரி சரி, நாம் யாரை கிராமத்தின் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும்?" என்று கேட்க எல்லா நண்டும் சுண்டும் விளித்தது. நேற்றுத்தானே நடத்தினேன் யாருக்கும் ஞாபகம் இல்லையா ? என்று மறுபடியும் கேட்க எல்லோரும் விழித்தனர். அனைவரையும் ஒரு முறை ஆழ்ந்து பார்த்துவிட்டு,
"யார் ஒருவர் தன்னலமின்றி கிராம மக்களுக்கு தொண்டு புரிவாரோ அவரைத்தான் நாம் கிராமத்தின் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும்" என்று நிறுத்தினாள். "ஹ்ம்ம் இப்ப சொல்லுங்க யாரை தேர்ந்தெடுப்பிர்கள் ?" என்றதும், ஒரு மிளகு "தன்னலமின்றி ...... என்று ஒரு நண்டு ஆரம்பிக்க இன்னொரு மிளகு தொண்டு.... என்று இழுக்க... மற்றொரு மிளகு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடித்தது. மற்றவார்த்தை எல்லாம் அக்காகுருவிய பார்க்க போச்சா? என்றதும், எல்லா குழந்தைகளும் சிரித்தது. தானும் சேர்ந்து சிரித்தாள்...


பள்ளியில் கடைசி வகுப்பு மணி அடிக்கவும், எல்லா சிட்டுகளும் தன் வீட்டைநோக்கி பறக்க ஆரம்பித்தன. மதுரமும் தன் வீட்டைநோக்கி உற்சாகமாக வேக நடைப்போட்டாள். கால் தன் போக்கில் போக, மனம் என்னவோ அண்ணன் வாசுவின் வருகையை பற்றி எண்ணியது. உனக்கு ஒரு விஷயம் இருக்குன்னு சொன்னானே என்னவா இருக்கும் என்று யோசித்து ஒன்றும் புலப்படாததால் அந்த ஆராய்ச்சியை கைவிடுத்தாள்.

மதுவின் வீடு தோப்பில் சற்று உள்ளட்டங்கி இருக்கும். முன்னும் பின்னும் ஏக இடம்விட்டு மத்தியில் அவள் தாத்தா சுந்தரேசன் கட்டியது. பழமையான மச்சு வீடு. வீட்டிற்கு வருவோரை இன்முகத்துடன் திண்ணையை ஒட்டியுள்ள மல்லிகை பந்தல் எல்லோரையும் முந்திக்கொண்டு வரவேற்கும்.


வீட்டை நெருங்கும்பொழுது லட்சுமி வாயில் நுரையுடன் துள்ளி குதித்து ஓடியது. நீ வரும்முன்பே அம்மா பால் கறந்துவிட்டாள் என்று சொல்லாமல் சொல்லியது. வீட்டிற்கு அவள் மாமா வந்துச்சென்ற அடையாளமாக பழங்கள் நிறைந்த ஒரு பை, பூ, கட்சி சம்பந்தமான நோட்டிஸ்களும் தெரிந்தன. மது நோட்டீஸ் ஒன்றை எடுத்து பார்த்தாள்,அதில் அவள் மாமாவின் படம் கட்சி தலைவரின் படத்திற்கு கீழாக பல வாக்குறுதிகளை அள்ளிவீசிக்கொண்டு சிரித்தார்.


மதுவின் தலை தெரிந்தவுடன், அவள் அம்மா செண்பகம் காபி எடுத்துக்கொண்டு வந்தாள். தன் பையை ஒரு ஆணியில் மாட்டிவிட்டு காபியை வாங்கிக்கொண்டாள். "ஏன்மா நான் வந்து பால் கரக்கமாட்டேனா ? " என்று வாஞ்சையுடன் கேட்டாள். செண்பகம் சிரித்துக்கொண்டே "உன் மாமன் ஒட்டுக்கேட்டு அவர் சகாக்களுடன் வந்தார், சும்மா அனுப்ப முடியுமா ???? அதான் நானே பால் கறந்து காபியும் பச்சியும் போட்டுக்கொடுத்து அனுப்பினேன்".



"ஹ்ம்ம் என்ன சொன்னார் உன் பெருமைக்குரிய அண்ணன்?"

"ஹரி சித்திரையில் வருகிறானாம். உன் அப்பாவையும் தாத்தாவையும் எங்கவென்று கேட்டார், தேங்காய் வெட்டு என்று சொன்னேன், சரி நானும் தோப்புப்பக்கம் தான் போகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிட்டார்."

ஏன்மா உங்கிட்ட மாமா ஒட்டு கேக்கலையா? என்றதும், "ஏண்டி என் அண்ணன் என்கிட்ட வாய் விட்டு கேட்க்கனுமாடி???.... என்றவாறு சிரித்தாள்.

அம்மா.... அப்பாகிட்ட தக்காளி வாங்கிவரச்சொன்னயா ? என்றதும் " வாங்கி வந்தாச்சுமா" என்றவள், மது இன்றைக்கு நீயே சமைமா என்றவாறு முக்காலியில் அமர்ந்தாள்.



எங்கோ " சித்திரையில் வந்து... நெஞ்சில் குடி கொண்ட.... உத்தமன் யாரோடி ...." என்ற பாடல் ஓடியது. தனக்கு தானே சிரித்துக்கொண்டு மாற்றுடை அணிந்து வீட்டு வேலையினை செய்ய ஆரம்பித்தாள். சற்றுக்கெல்லாம் மதுவின் அப்பா சிங்காரமும் அவரை தொடர்ந்து தளர்ந்த நடையுடன் சுந்தரேசனும் தேங்காய் வெட்டு கணக்கினைப்பற்றி பேசியவாறு திண்ணையில் வந்து அமர்ந்தார்கள்.

செண்பகம் அவர்கள் வரும் பொழுது மரியாதையை நிமிர்த்தமாக எழுந்து கொண்டு காபி கொண்டு வருமாறு மதுவிற்கு குரல்கொடுத்துக்கொண்டே தரையில் அமர்ந்தாள். மது இருவருக்கும் காபி கொடுத்துவிட்டு தானும் அவர்கள்பேச்சினை கவனித்தாள். பிறகு பின்கட்டிற்கு சென்று இரவு உணவாக இட்லியும் சட்னியும் செய்துவிட்டு தாத்தாவிற்கு கஞ்சியும் வைத்துவிட்டு மறுபடியும் திண்ணைக்கு வந்தாள். இபொழுது பேச்சு தேங்காயில் இருந்து நாற்றங்காளிற்கு வந்திருந்தது, "என்ன இன்னும் வாசு வரலை" என்று சுந்தரேசன் கேட்ட வேளையில், தாத்தா என்று பாசத்துடன் அழைத்தவாறு வீட்டிற்குள் நுழைந்தான். அனைவரும் அவனை மாற்றி மாற்றி நலம் விசாரித்தனர். மது நடுவீட்டில் அனைவருக்கும் தட்டை வைத்து அனைவரையும் சாப்பிட அழைத்தாள். அதே நேரத்தில் "அச்சோ எனக்கு பசிக்குது முதலில் சாபிட்றேன் பிறகு உங்க கேள்விக்கு பொறுமையாய் பதில் சொல்லறேன்" என்றான்.


சாப்பிட்டவாறே அப்பா என் நண்பன் கம்பென்யில் ஒரு நல்ல வேலை இருக்கு. அவங்களுக்கு சிங்கப்பூரிலும் கிளைகள் இருக்கு, அப்புறம் ஹரிகிட்ட பேசினேன் அவன் மது விருப்பட்டால் சரின்னு சொல்லிட்டான் என்றவாறு அனைவரின் முகத்தையும் படிக்க முற்பட்டான்.

சுந்தரேசன் " ஏண்டாப்பா வாசு, மது எவ்ளோ காலம் இங்க இருக்க போறா? இந்த சித்திரையில் ஹரிக்கும் லீவ் கிடைத்திடும், வைகாசியில் கல்யாணம், அப்புறம் நாம ஆசைபட்டாலும் இங்க இருக்க மாட்டாடா .... " என்றார் வருத்தத்துடன்.

சிங்காரம் " நீங்கள் சொல்றதும் வாஸ்துவம்பா ஆனால் சிங்கப்பூரில் மது வீட்டுக்குள் இருந்து ஹரி மட்டும் சம்பாரிச்சு குடுத்தனம் பண்ண முடியாது மதுவும் வேலைக்கு போனால்தான் அது பிள்ளை குட்டிகளுக்கு ஏதும் சேர்த்து வைக்க முடியும்.

"என்னம்மா நீங்க எதுவும் சொல்ல மாட்டேன்றிங்க ?" என்றான் வாசு.

செண்பகமும் " கொஞ்சநாள் வீட்டு வேலை பழகட்டும், இப்ப சென்னை வாசம் எல்லாம் தேவையில்லை கண்ணா". வாசு சிரிச்சுகிட்டே அம்மா இப்ப இவள்தானே எல்லாம் பண்றா பிறகு இன்னும் என்ன கத்துக்கணும்.

இந்த பேச்சுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதுபோல் மது அமைதியாக இருந்தாள். சுந்தரசேன் "அப்பா சொல்றதும் சரிதான்மா. நீ என்னமா நினைக்கிற?" என்றார்.
"தாத்தா அங்க டீச்சர் வேலை கிடைக்காதா?" என்றாள். வாசு முறைத்தான்,
பேத்திக்கு சென்னை செல்ல பிடித்தம் இல்லை என்பதை புரிந்துகொண்ட சுந்தரசேன் "சரி..... பார்க்கலாம் வாசு உனக்கு களைப்பா இருக்கும், நீ போய் தூங்கு என்றார். சிங்காரம் தோப்பிற்கு தண்ணீர் பாய்ச்ச மண்வெட்டியையும் டார்ச் லைட்டையும் எடுத்து கொண்டு கிளம்ப, வாசுவும் ஒரு மண்வெட்டியை எடுத்து கொண்டு அவருடன் கிளம்பினான்.


செண்பகமும் தூங்கிய பிறகு, மது மெதுவாக தாத்தாவிடம் சென்றால். சுந்தரேசனுக்கு பேத்தி தன்னிடம் விளக்கம் பெற வருவாள் என்பது தெரியும்.
சுந்தரேசன் "என்னமா தூக்கம் வரலையா?
மது " அண்ணனுக்கு என் மேல் கோபம்......."
சுந்தரேசன் "அவன் உன் நல்லதுக்கு தான்மா சொல்றான். உனக்கு ஏன் சென்னை போக பிடிக்கலை ?"
மது அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு சிரித்துக்கொண்டே "தாத்தா ஒரு மனிதனுக்கு எது மகிழ்ச்சியளிக்கும் ?"


சுந்தரேசன் " தாயின் கைப்பிடி சோறு, தன் தலை மொட்டை, புங்கை மரத்தின் நிழல்" இது மூன்றும் ஒரு மனிதனுக்கு அதித சுகம் அளிக்கும்னு என் தாத்தா ஓயாது சொல்லுவார். ஆனால் தனி மனிதனின் மகிழ்ச்சி எனபது வாழும் சுழல், காலத்தை ஒட்டியது. ஏன்மா இப்ப இது ரொம்ப முக்கியமான கேள்வியாமா ?"

மது " சும்மா சொல்லு தாத்தா.. உனக்கு எதெல்லாம் மகிழ்ச்சி?"

சுந்தரேசன் "பாட்டி வீட்டில் கொடுக்கும் அரையனா காசு, அப்பாவின் மென்மையான சிரிப்பு, பாலிய காலம், நான் உழைத்து வாங்கின நூறு குழி தோப்பு, உன் பாட்டியை கல்யாணம் பண்ணினது, உன் அப்பாவோட பொக்கை வாய் சிரிப்பு, அவன் கல்யாணம், வாசு, அப்புறம் இந்த மது..... இன்னும் நிறைய இருக்கு. நீ என்ன சொல்லனும்னு நினைக்கிறாயோ அதை சொல்லுமா..."

மது " எனக்கு இந்த ஆசிரியர் தொழில் பிடிச்சிருக்கு. மகிழ்ச்சியாய் இருக்கு. இதே வேலை அங்கும் கிடைக்கலாம் இல்லையா தாத்தா, அப்படி கிடைக்கவில்லை என்றால் நான் அதுக்கு தகுந்தார் போல் மாறிகொள்வேன். அண்ணன் சொல்றதும் எனக்கு புரியுது.. நான் இங்கு இருக்கும் வரையும் போகிறேன் தாத்தா. நீங்க சொன்னால் எல்லோரும் கேட்பாங்க."


சுந்தரேசன் " சரி நான் பேசுறேன்.... நீ போய் தூங்கு.. " மதுவும் தாத்தா இனி பார்த்து கொள்வார் என்னும் நம்பிக்கையில், தூங்க சென்றாள். தாத்தா யாரிடம் என்ன சொன்னார் என்று தெரியவில்லை.
அப்பாவோ இந்த சென்னை பயணத்தை பற்றி எதுவும் பேசவில்லை.

இதோ வாசுவும் சென்னைக்கு பயணப்பட்டு விட்டான். பேருந்தில் ஏறும் முன் "மது உனக்கு இந்த ஆசிரியர் தொழில் தான் விருப்பம்னு நினைக்கிறேன், ஹரிகிட்டையும் பேசி அதே வேலைகிடைக்க ஏற்பாடு பண்ண சொல்றேன்" என்றான்.

மது எதுவும் சொல்லாமல் சிரித்தாள்.
"என் மேல் கோபம் தானே ?" என்றாள்.
"அப்படியெல்லாம் இல்லை மது, நாங்க வேறமாதிரி நினைத்தோம் நீ வேறமாதிரி நினைக்கிறாய் அவ்ளோதான். சரி நான் கிளம்புகிறேன் என்றவன் அப்பாவிடமும் சொல்லிக்கொண்டு பேருந்தினுள் சென்று மறைந்தான். பேருந்து புறப்பட்டவுடன், அப்பாவுடன் வீட்டிற்கு வந்தாள்.

கடந்த ஒரு வாரமாக மனதினை அழுத்திக்கொண்டிருந்த இனம் புரியாத ஒரு சுமை, காற்றோடு போனதுபோல் உணர்ந்தாள். வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் சென்றது.