Monday, May 31, 2010

நழுவிய தருணங்கள்

நடந்தால் மனம் சமன்படும். சமன்பட்ட மனநிலையில் தெளிவான முடிவு எடுக்கலாம். இது அப்பாவிடமிருந்து எனக்கு வந்த பழக்கம், எந்தவொரு விசயத்தையும் தனியே அலசி ஆராய வேண்டும் என்றால் " சிவகாமி, கொஞ்சம் நடந்துட்டு வரேன்" என்ற தகவலுடன், செருப்பை மட்டும் போட்டுக்கொண்டு நடக்க ஆரம்பிப்பார். எப்பொழுது வந்து தூங்குவார் என்று யாருக்கும் தெரியாது. அவர் வரும்பொழுது வாசலில் உள்ள கயிற்று கட்டில் அவரை இதமாக வாங்கிக்கொள்ளும். அம்மா, அவள் முகத்தை பார்த்தால் எப்பவும் ஒரு சிரிப்பு மிதந்து கொண்டிருக்கும். அப்பாவின் உணர்வுகளின் கண்ணாடி, அப்பா சிரிச்ச சிரிப்பா அழுதால் அழுவாள். நான் நல்லா இருக்கணும் அவ்வளவுதான், மிக குறிகிய வட்டம்.


உண்மையில் நடந்தால் மனம் சமன்படுகிறதா இல்லை அப்பாவிடமிருந்து மனம் உள்வாங்கியதால் எனக்கும் இது கைவசபடுகிறதா என்று தெரியவில்லை. ஏனோ இன்று மனம் சமன்படவில்லை. நூல் அறுந்த பட்டம்போல் இலக்கின்றி மனம் அலைவதை உணர்கிறேன். எனக்கு பின்னால், ஒரு வாகனத்தின் ஒலி கேட்க அனிச்சை செய்யலாக சாலை ஓராமாக ஒதுங்கினேன். அவ்விடத்தில் உள்ள வீட்டின் சுற்றுச்சுவரில் விளம்பரம் செய்யாதீர் என்று விளம்பரம் செய்யபட்டிருந்தது. மறுபடியும் எண்ணங்களை அப்பா ஆட்கொள்கிறார்.

அப்பாவின் கைப்பிடித்து நடந்த காலத்திலும் சரி, வளர்ந்து கல்லூரி சென்ற காலத்திலும் சரி, அவரை கவனித்து மனம் உள்வாங்கிய பண்புகள் நிறைய இருந்தாலும், வாய் மொழியாக பகிர்ந்து கொண்டது சொற்பம் மிகச்சொற்பம்.

என் தேவைகள் எல்லாவற்றையும் நான் உணரும் முன்னே உணர்ந்து செய்திருக்கிறார் என்பது இப்பொழுது புரிகிறது. அவரிடம் நான் பாசாமா பேசினதில்லை, பாசத்தை வெளிப்படுத்தியதில்லை. ஆனால், கல்லூரியில் எனது நெருங்கிய நண்பர்கள் என்னை "சரியான அப்பா கோண்டுடா " என்று கிண்டல் செய்யும் அளவிற்கு என் பேச்சில் அப்பாவின் பங்கு இருக்கும்.

கல்லூரி படிப்பை தொடர்ந்து, வேலை கல்யாணம் குழந்தைகள்னு வாழ்க்கை அழகாகதான் ஓடிகொண்டிருந்தது. அன்று மதிய உணவு உண்டுவிட்டு, வெற்றில்லை போடும்போது, நெஞ்சு வலிக்குதுபா….. என்று சொல்ல, வீடு அமலிபட்டது. என் பொண்ணு, ஓடிபோய் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தால், அதை குடித்து விட்டு என்னைத்தான் பார்த்தார், அடுத்த கணம் உயிர் பிரிந்தது.

வீடு ஸ்தம்பித்து, இயல்பு நிலைக்கு வர பல மாதங்கள் ஆனது. சென்ற வாரம் தான் முதல் திதி, எனக்கு தெரியாத மொழியில் ஐயர் ஏதோ சொல்ல நானும் அதை வாங்கி மறுபடியும் சொன்னேன். அவருக்கு புரியுதோ என்னவோ என்று மனசுக்குள் சாந்தி சாந்தி என்று கூறினேன். எந்த குறையும் இன்றி நல்லபடியாக வாழ்ந்து போயிருக்கார் என்று இன்று காலை வரை நான் நம்பினேன்.


அப்பாவின் நண்பர், இன்று பிற்பகல், என்னை பார்த்தார், நலம் விசாரித்தார். பேச்சு முழுதும் அப்பாவை சுற்றித்தான். "உங்கப்பன், நீ அவன்கிட நிறைய பேசமாட்டேன்னு அடிகடி சொல்லுவண்டா" என்றார். அடுத்த வாரம் வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்லியவாறு அவர் வேலையே பார்க்க போய்விட்டார்.

முதல் முறையாக நான் இதைப்பற்றி யோசித்தேன், ஒரு வெற்றிடம் தெரிந்தது. நிறைய பேசியிருக்கலாம். நிறைய பகிர்ந்துருக்கலாம்.
ஆச்சு, மூன்று கிலோமீட்டர் நடந்தாச்சு. எது எப்படி இருந்தால், நடந்தால், போனால் எனகென்ன என் வேலையை சரியாக செய்வேன் என்று நேரம் ஓடிக்கொண்டிருந்தது.வீட்டைநோக்கி நடந்தேன். அம்மா, தாழ்வாரத்தில் காலை நீட்டியவாறு அமர்ந்திருந்தாள். அவள் அருகில் அமர்ந்தேன். அவள் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். ஏதாவது பேசுமா" என்றேன். இந்த தருணத்தை நழுவ விடக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது.