Thursday, March 13, 2008

பிச்சை இன்று இல்லை

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களை, சம்பவங்களை நாம் கடந்து வந்திருந்தாலும் ஒரு சில நிகழ்வுகள் மட்டும் மனதில் சம்மணமிட்டு அமர்ந்துகொள்ளும், அவற்றை அசைபோட்டு பார்ப்பது ஒரு சுகம். அப்படி நான் அசைபோட்டு பார்க்க முயலும் போது "இதோ நான் இருக்கிறேன்" என்று "பிச்சை" தான் என் மனத்திரையில் தோன்றும்.

பொதுவாக கிராமங்களில் வீட்டிற்கு ஒரு நாய் குட்டி இருக்கும். எங்கள் வீட்டில் பிச்சை இருந்தது. ஆமாம், எங்கள் வீட்டு நாய் குட்டியின் பெயர்தான் பிச்சை. இந்த கணத்தில் "ஏன் வேறபெயர் எதுவும் கிடைக்கவில்லையா?" என்று நீங்கள் கேட்கலாம். நானும்கூட அப்பொழுது என் அம்மாவிடம் இந்த பெயர் வேண்டாம் என்று அழுதேன்.

இந்த பிச்சைக்கு முன்பு ஜூரி, ப்ரோவ்னி, மங்கா என்று அழகான பெயர்கள் கொண்ட நாய் குட்டிகள் எங்கள் வீட்டில் இருந்து. ஏனோ எல்லா குட்டிகளும் சொற்பகாலத்தில் மறைந்தது. அதனால் தான் என் அம்மா பிச்சை என்ற பெயர் வைத்தார்கள். எனக்கு அப்பொழுது அந்த பெயர் பிடிக்கவில்லை. பிச்சை அழகாக இருக்கும். அதன் கண்களில் அப்படி பாசம் சொட்டும். பயங்கர சுட்டி.. :)

நான் ஏழாம் வகுப்பு விடுதியில் தங்கி படித்து கொண்டிருந்தேன். வீட்டிற்கு எப்பபோவோம் என்று ஏங்கிய காலம் அது. என்னை அப்பா வீட்டிற்கு அழைத்து சென்றார். நான் விடுமுறைக்கு வீட்டுக்கு சென்றால் வயலுக்கு போவது எனக்கு மிகப்பெரிய சுற்றுலாவாகும். என் அப்பா அதிகாலையில் வயலுக்கு புறப்பட்டுகொண்டிருந்தார். நானும் அடம்பிடித்து அப்பாவுடன் வயலுக்கு புறப்பட்டேன். எனக்கு துணையாக பிச்சையும் வந்தது. எங்கள் வீட்டிற்கும் வயலிற்கும் 2 கி.மி தொலைவாகும்.

என் அப்பா இயல்பாகவே வேகமாகத்தான் நடந்து செல்வார். நான் மெதுவாக நடத்து சென்றால் என்னை வீட்டிற்கு அப்பா திருப்பி அனுப்பிவிடுவரோ என்ற பயத்தினால் நானும் வேகமாக நடந்து சென்றேன். நடந்தேன் என்று சொல்வதைவிட ஓடினேன் என்று சொல்வது மிக பொருத்தமாக இருக்கும். எங்கள் இருவரையும் முந்தி கொண்டு பிச்சை ஓடியது :)

எங்கள் வயலுக்கு செல்லும் பாதையில் ஒருவருடைய நிலத்தில் மின்-இரைவை (Electric Pump) அமைக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. அதனால் அவ்விடம் சதுப்பு நிலத்தை போல் இருந்தது. ஏறக்குறைய புதைகுழி போன்று இருந்தது. என் அப்பா "ஆயி (பெண் பிள்ளையை இப்படி அழைப்பது வழக்கம்) பிச்சையை தூக்குபா, அந்த சகதியில் மாட்டினால் ஒன்னும் செய்யமுடியாது" என்று சொன்னார். நானும் அதை பிடிக்க அருகில் சென்றேன், நான் விளையாடுகிறேன் என்று அது சுற்றி சுற்றி ஓடி சரியாக அந்த சகதியில் போய்மாட்டிகொண்டது.

பிச்சை குறைத்து கேட்டதுண்டு, அன்றுதான் முதல் முறையாக அது அழுதது. எந்து ஒரு ஜீவனும் உயிர் வாழ்வதற்கு நூறு சதவிதம் முயற்சி செய்யும், அதை பிச்சையும் செய்ய முயன்றது. பிச்சை விழுந்தவுடன் அழுதுகொண்டே நீச்சல் அடிக்க முயன்றது. அதன் காரணமாக அதன் உடல் மிகவேகமாக உள்ளே சென்று கொண்டிருந்தது. அதன் முன் கால்களும், தலையும் மட்டுமே தெரிந்தது.

எனக்கு பிச்சையின் உடல் உள்ளேசெல்லும் என்று தெரியாது. நானும் அழுதேன். என் அப்பாவின் கைகளுக்கும் பிச்சை எட்டவில்லை. என் அப்பாவிடம் "குதிப்பா" என்று அழுதேன். ஆனால் அப்பா என்னை "எட்டிபோப்பா" என்று அதட்டினார். நான் அப்பாவை மனதில் திட்டிக்கொண்டு சில அடிகள் நகர்ந்தேன்.

என் அப்பா தன் முண்டாசை அவிழ்த்து ஒரு முனையை தூக்கி பிச்சையின் வாயருகே வீசினார். பிச்சையும் அந்த துண்டை கவ்விகொண்டது. எப்படியோ அப்பா பிச்சையை மீட்டார். எனக்கு ரொம்ப சந்தோசம் அந்த சந்தோசத்தை என்னால் வார்த்தைகளால் பதிவு செய்ய இயலாது.

பிறகு பிச்சையை ஏரியில் குளிக்கவைத்து, அதை கையில் இருந்து கீழே விடாமல் தூக்கிகொண்டே வீட்டிற்கு சென்றேன். அந்த நிகழ்வு என் அழ்மனத்தில் இன்றும் பசுமையாக இருக்கிறது. இப்பொழுதும் நான் தெருவில் எந்த நாய் குட்டியை பார்த்தாலும் பிச்சையின் கண்களை போன்று உள்ளதா என்று பார்ப்பேன். அனாலும் இன்று வரை நான் அந்த கண்களை பார்க்கவில்லை. பிச்சையும் தோராயமாக பத்து வருடம் எங்கள் வீட்டில் இருந்து மறைந்தது. ஆமாம் இன்று பிச்சை இல்லை. அதன் நினைவுகள் மட்டுமே உள்ளது.

Saturday, March 1, 2008

சாரிப்பா......

சென்னை என்றாலே ஒரு பரபரப்பு அதிலும் திங்கள் கிழமை என்றால் சொல்லவும் வேண்டாம்.இந்த பரபரப்பும் ஒரு அழகுதான். இதை படிக்கும் நண்பர்கள் அப்படி ஒண்ணும் இல்லைமானு சொன்னாலும் நான் மயிலை வாசியா இருக்கிற வரையுலும் இது சரிதான் என்று சொல்லுவேன் ஏன் என்றால் இருக்கின்ற இடம் சொர்க்கம் அல்லவா. என்னை வியக்க வைத்த ஒரு சிறிய நிகழ்வை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு சின்ன ஆசை......

வழக்கம் போல் அலுவலகத்திற்கு செல்ல, மயிலை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தேன். அன்று ஏனோ வழக்கத்தையும் விட அதிக கூட்டம். இளையவர் முதல் முதியவர் வரை மனதாற 21G யை வாழ்த்தி கொண்டு இருந்தார்கள். வழக்கம்போல் நானும் அதில் சேர்ந்தேன் :)

அப்பொழுது ஒரு சின்ன பையன் அவன் அப்பாவுடன் (அவர்கள் சம்பாசனையில் தெரிந்தது) பைக்கில் வந்து நான் நிற்கும் இடத்தில் இறங்கினான். அவன் நான்காம் அல்லது ஐந்தாம் வகுப்புதான் படிக்கலாம். அவன் முகத்தில் அப்படி ஒரு வருத்தம்.

அவன் அப்பா பைக்கை ஓரத்தில் நிறுத்திவிட்டு அவன் அருகில் நின்றார். ஒரு ஆட்டோவை நிறுத்தி அடையாரில் உள்ள ஒரு பள்ளியின் பெயரை கூறி எவ்வளவு என்று கேட்டாரு. அந்த ஆட்டோ ஓட்டுனர் 100 ரூபாய்னு சொல்ல, அவர் தனது கைகடிகாரத்தையும் பார்த்து அந்த பையனையும் பார்த்தார்.

அவன் கண்ணிலோ இப்ப எட்டிப்பார்கட்டுமா என்று கண்ணீர் குளம்.... அவன் அழுதிருக்கலாம், ஆனால் மிடர் விழுங்கி கண்ணீர் வெளிவராது கட்டுப்படுத்தினான். அவன் அப்பாவோ, 100 ரூபாயை நீட்டி போய் இறங்கினவுடன் கொடுக்கணும்னு என்று சொன்னார். அவன் அதை வாங்காமல் தலையை மட்டும் மறுத்து ஆட்டினான். கடந்த பத்து நிமிடங்களில், முதல் முறையாக அவன் வாய் திறந்து "சாரிப்பா இவங்க (பொதுவாக அந்த குட்டி கை எல்லோரையும் காட்டியது) போகிற பஸ்சில் ஏற்றி விடுங்க நான் ஸ்கூலுக்கு போய்டுவேன் என்று அழுகையை கட்டுப்படுத்தி சொன்னான். இந்த வயதில் இவனுக்கு இவ்வளவு தன்மானமானு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் அவன் முதுகில் செல்லமாக தட்டினேன்.என்னை பார்த்து அந்த பூ சிரிச்சது.

அவன் அப்பா அவனை அன்பொழுக உற்று பார்த்தார். இதற்குத்தான் காத்திருந்தேன் என்பதுபோல் இரண்டு துளி கண்ணீர் எட்டி பாத்துச்சு. தனது கை குட்டையால் அவனது கண்ணை மெல்ல துடைத்தார். இதில் இருந்து என்ன கத்துகிட்டனு கேட்டார் ???? அவன் பட்ட என்று "இனிமேல் சீக்கிரம் கிளம்பிடுவேன்பா, ஸ்கூல் பஸ்ஸை மிஸ் பண்ண மட்டேன்பானு சொன்னான்".

அவன் மறுபடியும் சாரிப்பானு சொன்னான். அவர் அவன் உச்சந்தலையில் முத்தமிட்டு, அவன் ஷர்ட் பாக்கெட்டில் 100 ரூபாயை வைத்து ஆடோல ஏறு உனக்கு ஸ்கூலுக்கு நேரமாகுதுனு சொன்னார். அவனும் ஆடோல ஏறி கொண்டு , அவங்க அப்பாக்கு டாடா காண்பித்தான், எனக்கும் காண்பித்தான். அந்த ஆட்டோ போனவுடன் அவரும் தனது பைக்கில் பறந்தார். எனக்கு அப்பஎங்கோ படித்த ஒற்றை வரி ஞாபகம் வந்தது. " உன் மகனுக்கு நீ பரிசளிக்க விரும்பினால் நல்நடத்தையை பரிசளி". அந்த தந்தை அவனுக்கு பரிசளித்துவிட்டார். ஒரு வழியாக "உனக்காக வருகிறேன் எனக்காக காத்திரு" என்று சொல்லாமல் சொல்லும் 21G யும் வந்தது, நானும் ஏறிகொண்டேன்.

அடுத்து வேலையை பற்றி சிந்தித்தாலும், எனக்கு அந்த நிகழ்வானது வரும் தலைமுறையும் சுய மரியாதையுடனும் பாசவுணர்வுடன் இருக்கும் என்று சொல்லாமல் சொல்லியது.இது என்னுடய் கருத்து அல்லது கண்ணோட்டமாகும். தமிழ் அங்கங்கு தத்தி இருக்கலாம் ஆகையால் குற்றம் குறை இருப்பின் மன்னிக்கவும்.