Thursday, March 13, 2008

பிச்சை இன்று இல்லை

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களை, சம்பவங்களை நாம் கடந்து வந்திருந்தாலும் ஒரு சில நிகழ்வுகள் மட்டும் மனதில் சம்மணமிட்டு அமர்ந்துகொள்ளும், அவற்றை அசைபோட்டு பார்ப்பது ஒரு சுகம். அப்படி நான் அசைபோட்டு பார்க்க முயலும் போது "இதோ நான் இருக்கிறேன்" என்று "பிச்சை" தான் என் மனத்திரையில் தோன்றும்.

பொதுவாக கிராமங்களில் வீட்டிற்கு ஒரு நாய் குட்டி இருக்கும். எங்கள் வீட்டில் பிச்சை இருந்தது. ஆமாம், எங்கள் வீட்டு நாய் குட்டியின் பெயர்தான் பிச்சை. இந்த கணத்தில் "ஏன் வேறபெயர் எதுவும் கிடைக்கவில்லையா?" என்று நீங்கள் கேட்கலாம். நானும்கூட அப்பொழுது என் அம்மாவிடம் இந்த பெயர் வேண்டாம் என்று அழுதேன்.

இந்த பிச்சைக்கு முன்பு ஜூரி, ப்ரோவ்னி, மங்கா என்று அழகான பெயர்கள் கொண்ட நாய் குட்டிகள் எங்கள் வீட்டில் இருந்து. ஏனோ எல்லா குட்டிகளும் சொற்பகாலத்தில் மறைந்தது. அதனால் தான் என் அம்மா பிச்சை என்ற பெயர் வைத்தார்கள். எனக்கு அப்பொழுது அந்த பெயர் பிடிக்கவில்லை. பிச்சை அழகாக இருக்கும். அதன் கண்களில் அப்படி பாசம் சொட்டும். பயங்கர சுட்டி.. :)

நான் ஏழாம் வகுப்பு விடுதியில் தங்கி படித்து கொண்டிருந்தேன். வீட்டிற்கு எப்பபோவோம் என்று ஏங்கிய காலம் அது. என்னை அப்பா வீட்டிற்கு அழைத்து சென்றார். நான் விடுமுறைக்கு வீட்டுக்கு சென்றால் வயலுக்கு போவது எனக்கு மிகப்பெரிய சுற்றுலாவாகும். என் அப்பா அதிகாலையில் வயலுக்கு புறப்பட்டுகொண்டிருந்தார். நானும் அடம்பிடித்து அப்பாவுடன் வயலுக்கு புறப்பட்டேன். எனக்கு துணையாக பிச்சையும் வந்தது. எங்கள் வீட்டிற்கும் வயலிற்கும் 2 கி.மி தொலைவாகும்.

என் அப்பா இயல்பாகவே வேகமாகத்தான் நடந்து செல்வார். நான் மெதுவாக நடத்து சென்றால் என்னை வீட்டிற்கு அப்பா திருப்பி அனுப்பிவிடுவரோ என்ற பயத்தினால் நானும் வேகமாக நடந்து சென்றேன். நடந்தேன் என்று சொல்வதைவிட ஓடினேன் என்று சொல்வது மிக பொருத்தமாக இருக்கும். எங்கள் இருவரையும் முந்தி கொண்டு பிச்சை ஓடியது :)

எங்கள் வயலுக்கு செல்லும் பாதையில் ஒருவருடைய நிலத்தில் மின்-இரைவை (Electric Pump) அமைக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. அதனால் அவ்விடம் சதுப்பு நிலத்தை போல் இருந்தது. ஏறக்குறைய புதைகுழி போன்று இருந்தது. என் அப்பா "ஆயி (பெண் பிள்ளையை இப்படி அழைப்பது வழக்கம்) பிச்சையை தூக்குபா, அந்த சகதியில் மாட்டினால் ஒன்னும் செய்யமுடியாது" என்று சொன்னார். நானும் அதை பிடிக்க அருகில் சென்றேன், நான் விளையாடுகிறேன் என்று அது சுற்றி சுற்றி ஓடி சரியாக அந்த சகதியில் போய்மாட்டிகொண்டது.

பிச்சை குறைத்து கேட்டதுண்டு, அன்றுதான் முதல் முறையாக அது அழுதது. எந்து ஒரு ஜீவனும் உயிர் வாழ்வதற்கு நூறு சதவிதம் முயற்சி செய்யும், அதை பிச்சையும் செய்ய முயன்றது. பிச்சை விழுந்தவுடன் அழுதுகொண்டே நீச்சல் அடிக்க முயன்றது. அதன் காரணமாக அதன் உடல் மிகவேகமாக உள்ளே சென்று கொண்டிருந்தது. அதன் முன் கால்களும், தலையும் மட்டுமே தெரிந்தது.

எனக்கு பிச்சையின் உடல் உள்ளேசெல்லும் என்று தெரியாது. நானும் அழுதேன். என் அப்பாவின் கைகளுக்கும் பிச்சை எட்டவில்லை. என் அப்பாவிடம் "குதிப்பா" என்று அழுதேன். ஆனால் அப்பா என்னை "எட்டிபோப்பா" என்று அதட்டினார். நான் அப்பாவை மனதில் திட்டிக்கொண்டு சில அடிகள் நகர்ந்தேன்.

என் அப்பா தன் முண்டாசை அவிழ்த்து ஒரு முனையை தூக்கி பிச்சையின் வாயருகே வீசினார். பிச்சையும் அந்த துண்டை கவ்விகொண்டது. எப்படியோ அப்பா பிச்சையை மீட்டார். எனக்கு ரொம்ப சந்தோசம் அந்த சந்தோசத்தை என்னால் வார்த்தைகளால் பதிவு செய்ய இயலாது.

பிறகு பிச்சையை ஏரியில் குளிக்கவைத்து, அதை கையில் இருந்து கீழே விடாமல் தூக்கிகொண்டே வீட்டிற்கு சென்றேன். அந்த நிகழ்வு என் அழ்மனத்தில் இன்றும் பசுமையாக இருக்கிறது. இப்பொழுதும் நான் தெருவில் எந்த நாய் குட்டியை பார்த்தாலும் பிச்சையின் கண்களை போன்று உள்ளதா என்று பார்ப்பேன். அனாலும் இன்று வரை நான் அந்த கண்களை பார்க்கவில்லை. பிச்சையும் தோராயமாக பத்து வருடம் எங்கள் வீட்டில் இருந்து மறைந்தது. ஆமாம் இன்று பிச்சை இல்லை. அதன் நினைவுகள் மட்டுமே உள்ளது.

5 comments:

Anonymous said...

Nice to read
by
Guess Me

Anonymous said...

Kannu epdi irukumnu sonna..Naanum inga bangalorela unnoda pitchai irukaanu paapeen...

Thirandha manathudan.....Aras...

Balaji Palamadai said...

Agalya Engeyo poittinga ponga!!!

Anonymous said...

Pichai - : nice ,simple,crisp .... easy to read for me

Anonymous said...

Pichai - : nice ,simple,crisp .... easy to read for me - gunaseelan.r /ciber india ltd